Saturday, April 27, 2013

அம்மாவின் இழப்பும் பொசுக்கென்று போவதும்

பதிவுப்போட்டு ரொம்ப நாளாகிவிட்டது.சமீபத்தில் ஏற்பட்ட அம்மாவின்(13-03-13) மறைவு முக்கியமான காரணங்களில் ஒன்று.வயது 87.படுத்தப்படுக்கையாகி  யாருக்கும் தொந்திரவு இல்லாமல் சடக்கென்று பூ உதிர்வது உதிரவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் படுத்தப்படுக்கையாக இருந்துதான் உதிர்ந்தார்.

அம்மா கும்பிடும் கடவுள்கள் அவரை பொசுக்கென்று உதிரவிடாமல் இரண்டரை மாதம் வெயிட்டிங் லிஸ்டில் வைத்துத்தான் அழைத்துச்சென்றார்கள்.

கடைசி பத்து நாள் நினைவு தப்பித்தான் கிடந்தார்.
 

சிதைந்துவரும் கூட்டுக்குடும்ப அமைப்பில் அவுட் சோர்சிங் நர்சுகள் கவனிப்பில் படுத்தப்படுக்கையாக கிடப்பது மிகவும் அவலமான ஒன்று.அம்மா செய்த அதிர்ஷடம் நான் பக்கத்தில் இருந்தது.தினமும் ஒரு மணி நேரம் மட்டும் அவுட்சோர்சிங் நர்ஸ்.உடம்பு துடைத்துவிடுதல் மற்றும் இயற்கையின் உபாதைகளை நீக்கி சுத்தம் செய்தல்.

படுத்தப் படுக்கையில் மிகவும் கொடூரமானது உடம்பில் வரும் படுக்கைப் புண்.பெட் சோர்(bedsore) எனப்படும் pressure ulcer.காரணம் “படுத்தப் படுக்கை”.அதுவும் ஒரே போசில் படுப்பது.அம்மாவிற்கும் வந்து அவஸ்தைப் பட்டார்.இதற்காக காற்றுப்படுக்கை வாங்கி (போட்டோவில் நீலநிறத்தில்). ஆனால் அது ஒரளவுக்குத்தான்.அதனால் தினமும்  எட்டு அல்லது ஒன்பது முறை அப்படியும் இப்படியுமாக அம்மாவைத் திருப்பி  படுக்கும் நிலையை மாற்றுவது.

அவரைத் திருப்பும்போது அவர் எழுப்பும் ஓலம் மிகவும் சோகமானது.

நல்ல வேளையாக என் அம்மா வேறு ஒரு விஷயத்தில் அதிர்ஷடம் செய்தவர்.பல மூத்தகுடிமகள்/ன்கள் வருடகணக்கில் படுத்தபடுக்கையாக கிடக்கிறார்கள் அதுவும் சிலபேர் நினைவில்லாமல் பச்சைகாய்கறியாக.வரும் தலைமுறை படுத்தப்படுக்கை மூத்த குடிமகன்/ள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சனை.தனித்துவிடப்பட்ட மற்றும் குழந்தை இல்லா பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று.

அவுட்சோர்சிங் பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது.


ஒன்று அல்லது இரண்டு நாள் நர்ஸ் வராவிட்டால்? பொசுக்கென்று தூக்கத்தில் போய்விட வேண்டும்.என் அப்பா அப்படித்தான் போனார்.

9 comments:

  1. உங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள் சார்.
    உங்களோடு துணை நிற்போம்.

    ReplyDelete
  2. அம்மாவின் இழப்புக்கு ஈடு செய்ய முடியாது.ஆழ்ந்த வருத்தங்கள்

    ReplyDelete
  3. Heartfelt condolences sir! Extremely sorry for the loss!

    ReplyDelete
  4. ரவி எனது ஆழ்ந்த வருத்தங்கள் அந்த நாள் குரோம்பேட்டை நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகிறது அம்மா என்றால் அன்பு மாட்டுமே

    சேட்

    ReplyDelete
  5. எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  6. அம்மா....ஒற்றைச்சொல் போதும்...

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!